பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகம்


பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகம்
x
தினத்தந்தி 19 April 2019 11:15 PM GMT (Updated: 19 April 2019 8:07 PM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சத வீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் ஆகும்.

புதுக்கோட்டை, 

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 74 மாணவர்களும், 11 ஆயிரத்து 137 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 211 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 777 மாணவர்களும், 10 ஆயிரத்து 414 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 191 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.01 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் கடந்த ஆண்டைவிட 1.48 சதவீதம் அதிக தேர்ச்சி ஆகும்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 94 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 90.47 சதவீதம் தேர்ச்சி ஆகும். மேலும் கடந்த ஆண்டைவிட 1.28 சதவீதம் அதிகம் ஆகும். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 785 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.91 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.21 சதவீதம் அதிகம் ஆகும். இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 585 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 929 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 88.25 சதவீதம் ஆகும்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பார்க்க மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளி வளாகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story