திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு “சீல்” வைப்பு


திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு “சீல்” வைப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:15 AM IST (Updated: 20 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு “சீல்” வைக்கப்பட்டது.

திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

இதனையடுத்து நேற்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் நேமா, திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு “சீல்” வைத்தார்.

அப்போது கலெக்டர் ஆனந்த் கூறியதாவது:-

நாகை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,840 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் பணியில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 6 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள்், 54 போலீசார், 24 மத்திய பாதுகாப்பு படையினர், 70 தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், 40 திருவாரூர் ஆயுதப்படையினர் என மொத்தம் 214 போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் இந்த மையத்தில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, நாகை சப்-கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story