கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு


கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 19 April 2019 11:30 PM GMT (Updated: 19 April 2019 9:01 PM GMT)

கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓய்கிறது. இதையொட்டி சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

237 வேட்பாளர்கள்

இதில் பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் தார்வார், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், பெலகாவி, சிக்கோடி, உத்தர கன்னடா, தாவணகெரே, பீதர், விஜயாப்புரா, பீதர், பாகல்கோட்டை, கொப்பல், கலபுரகி ஆகிய 14 தொகுதிகளில் 23-ந் தேதி நடக்கிறது.

கர்நாடகத்தில் நடைபெறும் இந்த 2-வது கட்ட தேர்தலில் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

பகிரங்க பிரசாரம்

இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பாகல்கோட்டை, சிக்கோடி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராய்ச்சூர், சிக்கோடியில் வாக்கு சேகரித்தார். மோடி, ராகுல் காந்தி இருவரும் தங்களின் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டனர்.

அதுபோல் சித்தராமையா ராய்ச்சூர், பாகல்கோட்டையிலும், முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிவமொக்காவிலும் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தனர். அதுபோல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

தீவிர வாக்கு சேகரிப்பு

கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும் வட கர்நாடகத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை கக்கி வருகிறது.

Next Story