நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட தனியார் நிறுவன அதிகாரிக்கு கைவிரலில் வைத்த மை அழிந்தது தேர்தல் ஆணையம் மீது போலீசில் புகார் அளித்தார்

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட தனியார் நிறுவன அதிகாரிக்கு கைவிரலில் வைத்த மை அழிந்தது தேர்தல் ஆணையம் மீது போலீசில் புகார் அளித்தார்
x
தினத்தந்தி 20 April 2019 3:30 AM IST (Updated: 20 April 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட தனியார் நிறுவன அதிகாரிக்கு கை விரலில் வைக்கப்பட்ட ‘மை’ அழிந்தது. இதனால் தேர்தல் ஆணையம் மீது போலீசில், தனியார் நிறுவன அதிகாரி புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட்ட தனியார் நிறுவன அதிகாரிக்கு கை விரலில் வைக்கப்பட்ட ‘மை’ அழிந்தது. இதனால் தேர்தல் ஆணையம் மீது போலீசில், தனியார் நிறுவன அதிகாரி புகார் கொடுத்துள்ளார்.

கைவிரலில் வைத்த மை அழிந்தது

பெங்களூரு புலிகேசிநகர் அருகே வசித்து வருபவர் பிரிக்சித் தலால் (வயது 43). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட 14 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஓட்டுப்போட பிரிக்சித் தலால் ஓட்டுரிமை பெற்றிருந்தார். அவர் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ராபர்ட்சன் ரோட்டில் உள்ள பெங்களூரு மாநகராட்சி அரசு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார்.

இதற்காக அவரது கை விரலில் அழியாத மையை ஊழியர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவர் சாப்பிடுவதற்காக தனது கையை சோப்பு போட்டு கழுவினார். அப்போது பிரிக்சித் தலால் கை விரலில் வைக்கப்பட்டு இருந்த மை அழிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தேர்தல் ஆணையம் மீது புகார்

உடனே தான் ஓட்டுப்போட்ட வாக்குச்சாவடிக்கு சென்று மை அழிந்தது பற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் பிரிக்சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தேர்தல் ஆணையம் மீது அவர் புகார் கொடுத்தார்.

அதில், ஓட்டுப்போட்ட பின் விரலில் வைக்கப்படும் மை குறைந்தது 2 வாரங்கள் அழியாமல் இருக்கும், ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட மை உடனடியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் பிரிக்சித் தலால் கூறி இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story