நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் வாக்கு சதவீதம் அதிகரிப்பு ஆளுங்கட்சிக்கு பின்னடைவா?
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஆளுங்கட்சிக்கு பின்னடைவா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஆளுங்கட்சிக்கு பின்னடைவா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா தொகுதி
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முதல்கட்டமாக மைசூரு-குடகு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மண்டியா உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மண்டியா தொகுதி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து நடிகை சுமலதா அம்பரீஷ் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். நிகில் குமாரசாமிக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கி பலம். அதுபோல் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளதால் கூடுதலாக வாக்கு அவருக்கு கிடைக்கும்.
அதே வேளையில் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவும், அதிருப்தி காங்கிரசாரின் ஆதரவும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் அம்பரீசின் ஆதரவாளர்களின் வாக்கு வங்கியும் சுமலதாவுக்கு கைகொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் மண்டியா தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
வாக்கு சதவீதம் அதிகரிப்பு
இதில் மண்டியா தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பதிவான வாக்குகள் சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு 71.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் 2018-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் 52.99 சதவீத வாக்குகள் தான் பதிவாகி இருந்தது.
நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் மண்டியா தொகுதியில் 80.24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதாவது, மலவள்ளி சட்டசபை தொகுதியில் 76.68 சதவீதமும், மத்தூரில் 82.47 சதவீதமும், மேல்கோட்டையில் 86.54 சதவீதமும், மண்டியாவில் 74.78 சதவீதமும், ஸ்ரீரங்கப்பட்டணாவில் 81.91 சதவீதமும், நாகமங்களாவில் 81.47 சதவீதமும், கிருஷ்ணராஜபேட்டையில் (கே.ஆர்.பேட்டை) 80.19 சதவீமும், கே.ஆர்.நகரில் 79.31 சதவீதமும் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மண்டியாவில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது பல்வேறு கேள்விகணைகளை தொடுக்கிறது.
ஆளுங்கட்சிக்கு பின்னடைவா?
பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசும் பட்சத்தில் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்பது சொல்வது உண்டு. அதுபோல் மண்டியா தொகுதியில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பது ஆளுங்கூட்டணி அரசுக்கு எதிரான வாக்குகளாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அதே வேளையில் இந்த வாக்கு சதவீதம் அதிகரிப்பு ஆளுங்கட்சிக்கு ஆதரவானது தான் என்று ஒரு தரப்பினரும் கூறுகிறார்கள். இருப்பினும் கடந்த தேர்தல்களை விட தற்போது வாக்குப்பதிவு அதிகரித்து இருப்பது, அதிகளவில் வாக்காளர்கள் வந்து ஆர்வமுடன் வாக்களித்து இருப்பதே காரணம் என்பது பெருமைக்குரிய விஷயம் தான். எது... எப்படியோ.... வாக்குப்பதிவு அதிகரிப்புக்கான காரணம் ஓட்டு எண்ணிக்கை நாளான மே மாதம் 23-ந்தேதி தெரிந்துவிடும்.
Related Tags :
Next Story