வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம்: பணமதிப்பிழப்பு திட்டம் இலக்கை எட்டவில்லை சிவசேனா கருத்து


வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம்: பணமதிப்பிழப்பு திட்டம் இலக்கை எட்டவில்லை சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 20 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டம் அதன் இலக்கை அடையவில்லை என்பதை உணர்த்துவதாக சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

மும்பை, 

வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டம் அதன் இலக்கை அடையவில்லை என்பதை உணர்த்துவதாக சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

வருமான வரி சோதனை

நாடாளுமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்களிடம் நடத்திய வருமான வரி சோதனையில் மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத் உதவியாளர் வீட்டில் இருந்து ரூ. 100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மராட்டியத்தில் இதுவரை தேர்தலுக்காக புழங்கிய ரூ.211 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலக்கை எட்டவில்லை

கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவே பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தும் என மத்திய அரசு நம்பியது.

ஆனால் அந்த இலக்கை அரசின் பணமதிப்பிழப்பு திட்டம் எட்டவில்லை என்பதையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது. எனவே 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தின் இலக்கை மீண்டும் அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

புதிதாக அமையும் அரசு பயங்கரவாத பண பரிவர்த்தனை மற்றும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் தற்போதும் கூட கருப்பு பண பரிவர்த்தனையில் ஈடுபடுவதுடன், அதை வைத்து அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story