விருதுநகர் நாடாளுமன்ற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி - வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைப்பு


விருதுநகர் நாடாளுமன்ற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி - வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:30 AM IST (Updated: 20 April 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நாடாளுமன்ற, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர், 

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்காக விருதுநகர் தொகுதிக்கு நேற்றுமுன்தினம் 1,673 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு செலுத்தும் மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்கு சரிபார்க்கும் எந்திரங்கள் ஆகியவை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பொது பார்வையாளர் முகேஷ்குமார் சுக்லா, கலெக்டர் சிவஞானம் வேட்பாளர்கள். பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இதேபோன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்காக, 284 வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்தும் எந்திரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. அந்த எந்திரங்கள் அனைத்தும் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தான் அடுத்த மாதம் (மே)23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் தாசில்தார், துணை தாசில்தார் நிலையான அலுவலர்கள் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ளது. இங்கு 281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் 73.02 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் சேகரிக்கப்பட்டு இரவோடு இரவாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பராசக்தி பெண்கள் கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு எடுத்துச்செல்லப்பட்ட எந்திரங்கள் அனைத்தும் அங்கு தனி அறையில் வைக்கப்பட்டன.

Next Story