விண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்


விண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்
x
தினத்தந்தி 20 April 2019 3:57 PM IST (Updated: 20 April 2019 3:57 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் நாட்டின் ஹயபுசா 2 விண்கலம், தான் ஆராய்ந்து வரும் ஒரு விண்கல்லில் வெடிபொருளை வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

‘ரியுகு’ என்ற அந்த விண்கல்லில் செயற்கையாக ஒரு குழியை ஏற்படுத்துவதே இந்த வெடிப்பின் நோக்கம்.

இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இவ்விண்கலம் மீண்டும் அந்த விண்கல்லுக்குச் சென்று வெடித்த இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கும். அந்த மாதிரியில் விஞ்ஞானிகள் பிறகு ஆய்வு மேற்கொள்வார்கள். சூரிய மண்டலத்தின் தொடக்க காலங்களில் பூமி எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் முயல்வார்கள்.

இந்த வெடிப்பு முயற்சி வெற்றி பெற்றதா என்பதை இம்மாத இறுதியில்தான் உறுதி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

‘ஸ்மால் கேரி ஆன் இம்பேக்டர்’ என்று அழைக்கப்படும் 14 கிலோ எடையுள்ள இந்த வெடிபொருளை விண்கல்லை நோக்கி ஏவியது ஹயபுசா விண்கலம். ரியுகு விண்கல்லில் 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.

கூம்பு வடிவிலான இந்த வெடிபொருள் கலன், வெடிமருந்து நிரப்பப்பட்டு, ஹயபுசா விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. விண்கல்லின் மேற்பரப்பில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் விண்கலத்தில் இருந்து பிரிந்தது வெடிபொருள். உடனடியாக தனது திசையை மாற்றிக்கொண்டு விண்கல்லின் மறுபுறம் சென்று ‘ஒளிந்துகொண்டது’ விண்கலம். வெடிபொருள் வெற்றிகரமாக வெடித்தால் அதனால் தெறிக்கும் துகள்களால் தமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே இப்படி மறைந்துகொண்டது.

வெடிப்பு முயற்சி வெற்றிகரமாக நடந்திருந்தால், அதனை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஜாக்சா) ஏவிய டிகேம்3 என்ற சிறிய கேமரா படம் பிடித்திருக்கும். வெடிப்புச் சம்பவத்தை ஒரு கி.மீ. தொலைவில் இருந்து இந்த கேமரா படம் பிடித்து தமது தாய்க்கலத்துக்கு அப்படங்களை அனுப்பும்.

ஆனால் இந்தப் படங்கள் பூமிக்கு வந்து சேர எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. திட்டமிட்டபடி நடந்தால் சில வாரங்களில் ஹயபுசா விண்கலம், ரியுகு விண்கல்லில் வெடிப்பு நடந்த இடத்தில் உள்ள குழிக்கு சென்று மாதிரிகளைச் சேகரிக்கும்.

குறிப்பிட்ட 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஓர் இடத்தில் இந்த வெடிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்த வெடிப்புத் திட்டத்தின் மேலாளர் யுய்ச்சி சுடா முன்னதாக கூறியிருந்தார்.

இந்த விண்கலத் தாக்குதல் சோதனை என்ன மாதிரியான தகவல்களைத் தருகிறது என்று பார்ப்போம்.

Next Story