வேலூர், ராணிப்பேட்டையில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
வேலூர், ராணிப்பேட்டையில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வேலூர்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, காட்பாடி, ஆற்காடு மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே) 23–ந் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் நேற்று பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள வீடியோ கேமராக்கள் இயங்குவதையும், அவைகள் 24 மணி நேரம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய பாதுகாப்பு படையின் கண்காணிப்பு பணிகள் குறித்தும் பாதுகாப்பு வீரர்களிடம், அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
வேட்பாளர்களின் முகவர்கள் பாதுகாப்பை கண்காணிக்க வருகை புரிந்தார்களா? என்பதை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையன்று செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
இதேபோல் குடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இங்கும் அடுத்த மாதம் 23–ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், அரக்கோணம் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்தீபன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வாலாஜா தாசில்தார் மற்றும் அலுவலர்கள், போலீசார் உடனிருந்தனர்.