குடியாத்தம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை


குடியாத்தம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2019 4:15 AM IST (Updated: 20 April 2019 7:04 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒலக்காசி ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 42). இவரது மனைவி கனிமொழி (37). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மூத்த மகன் குணா குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இளைய மகன் அரி வேலைக்கு சென்று வருகிறார்.

மதிவாணன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கனிமொழி நெசவு தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் மதிவாணன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மதிவாணன் கனிமொழி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பேரணாம்பட்டு அருகே கொண்டமல்லி சுடுகாடு பகுதியில் புளியமரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்–இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதிவாணன் என்பது தெரியவந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த மதிவாணன் மோட்டார்சைக்கிளை சுடுகாடு பகுதியில் மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு அதன் மீது ஏறி மரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை எரித்துக்கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story