தேர்தல் பணி முடிந்ததால் துணை ராணுவத்தினர் பிற மாநிலங்களுக்கு சென்றனர் வேலூர் மாவட்ட போலீசார் கேரளா விரைவு
தேர்தல் பணி முடிந்ததால் துணை ராணுவத்தினர் பிற மாநிலங்களுக்கு சென்றனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து 200 போலீசார் தேர்தல் பணிக்காக கேரள மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
வேலூர்,
தமிழகத்தில் கடந்த 18–ந் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், 7 கம்பெனி துணை ராணுவத்தினர், 3 கம்பெனி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் 2 கம்பெனி துணை ராணுவப்படையை சேர்ந்த 140 பேர், மத்திய தொழிற் பாதுகாப்பு படையை சேர்ந்த 80 பேர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பணியாற்ற சென்றனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேவைக்கேற்ப துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள். எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் பணியில் தயார் நிலையில் வேலூர் மாவட்ட போலீசார் உள்ளனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 200 போலீசார் கேரள மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர்.