திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 3 நாட்களில் 100 டன் குப்பைகள் அகற்றம்
சித்ரா பவுர்ணமி முடிந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 3 நாட்களில் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி கடந்த 18–ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி நேற்று முன்தினம் மாலை 5.35 மணிக்கு நிறைவடைந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த 18–ந் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர் விஜயக்குமார் உத்தரவின் பேரில் வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து 180–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த 18–ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் தொடர்ந்து துப்புரவு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டனர்.
மேலும் நகராட்சி சார்பில் கிரிவலப்பாதை மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தற்காலிக குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடங்களில் கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். கிரிவலப்பாதை மற்றும் நகராட்சி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது. அத்துடன் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் குளோரின் பவுடர்கள் போடப்பட்டன.
கடந்த 3 நாட்களில் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் கிரிவலப்பாதையில் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன், நகர்நல அலுவலர் பிரதாப், துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த தகவலை நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.