திருவண்ணாமலை, செய்யாறு அரசு கலைக்கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்


திருவண்ணாமலை, செய்யாறு அரசு கலைக்கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 4:17 PM GMT)

திருவண்ணாமலை, செய்யாறு அரசு கலைக்கல்லூரிகளில் இளங்கலை பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

செய்யாறு, 

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் மார்ச் 19-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையொட்டி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2019- 20-ம் கல்வியாண்டுக்கான இளங்கலைப் பிரிவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியியல், இளம் வணிகவியல் பாடப்பிரிவில் பி.காம், பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. மற்றும் இளம் அறிவியல் பிரிவில் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 13 பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் வழங்கப்பட உள்ளது.

பொதுப்பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சின்னய்யா தெரிவித்துள்ளார்.

இதேபோல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2019-2020-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இளங்கலை பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் கல்லூரி வேலை நாட்களில் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற மே 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ஆ.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Next Story