ஊட்டியில் பலத்த மழை: கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு
ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 17-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அதற்கு அடுத்த நாள் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. அவ்வப்போது பகல் நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. மதியம் 1 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழையாக உருவெடுத்தது. இந்த மழை விடாமல் 1½ மணி நேரம் தொடர்ந்து பெய்து, கொட்டி தீர்த்தது.
ஊட்டி நகரில் ஹில்பங்க், பிங்கர்போஸ்ட், காந்தல், கோடப்பமந்து, நொண்டிமேடு, புதுமந்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஊட்டியில் கூட்ஷெட் சாலை, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, ஊட்டி-குன்னூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் கழிவுநீரும் ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. பலத்த மழை காரணமாக பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஊட்டி படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அதன் காரணமாக இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக சுற்றுலா வேன் ஒன்று வேகமாக வந்தது. ஆனால், தண்ணீர் அதிகமாக இருந்ததால் சுற்றுலா வேன் செல்ல முடியாமல் சிக்கியபடி நின்றது. அந்த வேனை சிலர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தள்ளி இயக்க பார்த்தனார். அது பலன் அளிக்கவில்லை. ஊட்டி ரெயில்வே போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் தண்ணீர் புகுந்தது.
மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் மற்றும் சுற்றுலா பஸ்சை மழைநீர் சூழ்ந்து இருந்தது. ஊட்டி படகு இல்ல சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோடப்பமந்து கால்வாயில் வந்த தண்ணீர் ஊட்டி ஏரியில் கலந்ததால், தேங்கி நின்ற தண்ணீர் வடிய ஆரம்பித்தது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதி அடைந்தனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மழைநீர் கால்வாயில் வழக்கம்போல் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கியதோடு சில கடைகளுக்குள் புகுந்தது. அதனை தொடர்ந்து அங்கு கடை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அடைப்புகளை சரிசெய்து, தண்ணீரை வெளியேற்றினர். ஊட்டியில் பெய்த பலத்த மழையால் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழையில் நனையாமல் இருக்க சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நின்றனர். பின்னர் மழை விட்டதும், சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டது. மேலும் காந்தல் பகுதியில் 3 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது. ஊட்டியில் நேற்று 24 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story