உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; முதியவர் பலி மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 30 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் முதியவர் பலியானார். மேலும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
புதுக்கோட்டையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கார் ஒன்று சர்வீஸ் சாலையில் இருந்து புறவழிச்சாலையில் ஏறியது. இதை பார்த்த ஆம்னி பஸ் டிரைவர், கார் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்தார். அந்த சமயத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு ஆம்னி பஸ், புதுக்கோட்டை பஸ்சின் பின்புறம் மோதியது.
அப்போது கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சும், திருச்சி பஸ்சின் பின்புறம் மோதி நின்றது. இதற்கிடையே உடன்குடியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் டிரைவர், பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நிற்பதை பார்த்து பிரேக் பிடித்தார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், கொடைக்கானல் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அந்த சமயத்தில் சென்னை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று உடன்குடி ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் மோதி நின்றது.
இந்த விபத்தில் உடன்குடி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் மிருதுளா (வயது 22), மோனிஷா(22), சீசு(22), சுஜிதா(21), உடன்குடியை சேர்ந்த கன்சூர்ரகமது, விசாகான், சாதிக்பாஷா(39), கபாலி(24), சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரியா(38), குருபிரசாத் மகன் சாய்வர்சன்(10), நெல்லையை சேர்ந்த செலின்(28), சந்தானம்(48), வீரராகவன்(40), சென்னையை சேர்ந்த பால்ராஜ்(65) உள்ளிட்ட 31 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு அனைவரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 30 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story