வடலூரில் பரபரப்பு தே.மு.தி.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் விசாரணை


வடலூரில் பரபரப்பு தே.மு.தி.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

வடலூரில் தே.மு.தி.க. பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்டார். தேர்தல் முன்விரோதத்தில் யாரேனும் வெட்டினார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வடலூர், 

வடலூர் அருகே உள்ள ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் செந்தில்குமார்(வயது 39). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தே.மு.தி.க.வில் ஊராட்சி செயலாளராக உள்ளார். வழக்கமாக இவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் தான் இரவில் தூங்குவார்.

அதன்படி நேற்று முன்தினமும் தனது மோட்டார் கொட்டகைக்கு சென்று தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலை அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்தவர்கள், பார்த்த போது செந்தில்குமார் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்கிற நோக்கில், அவர் தனியாக இருந்த போது அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தேர்தல் முன்விரோதத்தில் தான் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story