கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து ஓசூரில் பரபரப்பு
ஓசூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரைச் சேர்ந்தவர் சரவண குமார் (வயது 28). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இது தொடர்பாக சரவணகுமாருக்கும், அந்த பெண்ணின் கணவர் கோவிந்தசாமிக்கும் (34) இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணகுமார் வேலை முடித்து நஞ்சப்பா சர்க்கிளில் இருந்து அனுமேப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணகுமாரின் கழுத்து, தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சரவணகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை தேடி வருகிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
Related Tags :
Next Story