இட்டமொழி அருகே பயங்கரம்: மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை நகைக்காக தீர்த்துக்கட்டினரா? போலீசார் விசாரணை


இட்டமொழி அருகே பயங்கரம்: மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை நகைக்காக தீர்த்துக்கட்டினரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 3:00 AM IST (Updated: 21 April 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழி அருகே மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகைக்காக அவரை தீர்த்துக்கட்டினரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்டமொழி, 

இட்டமொழி அருகே மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். நகைக்காக அவரை தீர்த்துக்கட்டினரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன் மனைவி வசந்தா (வயது 65). இவர் வீட்டில் இருந்தபடியே குண்டூசி பேக்கிங் செய்யும் வேலை செய்து வந்தார். குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த தம்பதியின் மகன் சுரேஷ் (35). இவர் திருமணம் ஆகி, கேரளாவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இதனால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பிணமாக கிடந்தார்

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வசந்தா வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு வசந்தா அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

கழுத்தை இறுக்கி கொலை

வசந்தாவின் கைகள் சேலையால் சுற்றி கட்டப்பட்டு இருந்தது. மற்றொரு சேலையால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது. எனவே, அவர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். வசந்தா அணிந்திருந்த கம்மல்கள் கழற்றப்படவில்லை. கழுத்தில் கிடந்த நகைகள் காணாமல் போய் இருந்தது. எனவே, மூதாட்டியை நகைக்காக மர்மநபர்கள் தீர்த்துக்கட்டினரா? அல்லது கற்பழித்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர் அகஸ்டா மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிந்திருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

பரபரப்பு

விசாரணைக்கு பிறகு வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story