பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்தது.
புஞ்சைபுளியம்பட்டி,
பவானிசாகர் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி-கொடிகள் காய்ந்து கருகி விட்டன. மேலும் வனக்குட்டைகளிலும் தண்ணீர் இல்லை.
இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்துவிடுவதோடு, அந்தப்பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருக்கும் வாழை, கரும்பு, கம்பு மற்றும் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி பவானிசாகர் போலீஸ் நிலைய குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை, விவசாயியான அப்புச்சாமி என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்து கொண்டு இருந்தது. இதில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு, தோட்டத்தின் அருகே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த அப்புசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது யானை ஒன்று வாழைகளை நாசப்படுத்திக்கொண்டு இருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்ததோடு, அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் இதுபற்றி பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, தீப்பந்தங்கள் காட்டியும், பட்டாசுகள் வெடித்தும் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். எனினும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், அந்த வாழைத்தோட்டத்தை சுற்றியே வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒற்றை யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை கிராமப்பகுதிக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள வாழைகளை அந்த யானை தின்றுவிடுகிறது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் கண்விழித்து காவல் காத்தும் யானையின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை. இதேபோல் ஒற்றை யானை கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். அதனால் வனத்துறையினர் ஒற்றை யானை கிராமப்பகுதிக்குள் புகாத வகையில் நடவடிக்கை எடுப்பதோடு, வாழைகளை இழந்த எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story