திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 21 April 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கோபுரங்கள் 2 இடங்களில் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதுவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கதவுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் ஜன்னல்கள் அனைத்தும் பலகை வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

6 அறைகளில் 6 சட்டமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைக்கு உள்ளே, கட்டுப்பாட்டு அறையின் நுழைவு கதவு பகுதி, அந்த கட்டிடத்தின் நுழைவு பகுதி என சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் கட்டிடத்தை சுற்றி மொத்தம் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர கல்லூரி வளாகத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 102 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கல்லூரிக்குள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் 2 எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி வரை வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு அந்த காட்சிகள் சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர கல்லூரி வளாகத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை பகுதியில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். அதற்கு அடுத்ததாக பட்டாலியன் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு உள்ளூர் போலீசார் கல்லூரி வளாகம் பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையில் ஒரு நேரத்தில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுதவிர வேட்பாளர்களின் ஏஜெண்டுகளில் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. கல்லூரி வளாகம் முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அங்குள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார். இதுபோல் திருப்பூர் மாநகர துணை கமிஷனர் உமா, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மேற்பார்வையிட்டு சென்றார். வாக்கு எண்ணும் மையத்துக்குள் யார் வந்தாலும் அவர்கள் குறித்த பெயர், விவரம், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் குறிப்பேடுகளில் குறித்து சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். கல்லூரி வளாகம் முழுவதும் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Next Story