வறட்சி எதிரொலி: குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


வறட்சி எதிரொலி: குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 21 April 2019 3:30 AM IST (Updated: 21 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் வாரச்சந்தையில் மாடுகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

குண்டடம்,

தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்ற தேர்தல் காரணம் என்பதால் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு குண்டடத்தில் நேற்று மாடு சந்தை நடைபெற்றது. மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த சந்தைக்கு குண்டடம், காங்கேயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்காக காளை மாடுகள், பசு மாடுகள், வளர்ப்பு கன்றுகள், காளை கன்றுகளை கொண்டு வந்தனர்.

வழக்கமாக இந்த சந்தைக்கு சுமார் 3 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தேர்தல் முடிந்து விட்டதால் வியாபாரிகள் மாடுகளை அதிக விலை கொடுத்து வாங்கி செல்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் 4 ஆயிரம் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஊட்டி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மாடுகள், வளர்ப்பு கன்றுகள், காளை கன்றுகளை வாங்கி சென்றனர்.

கடந்த வாரங்களை காட்டிலும் இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மாடுகள் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. கடந்த வாரம் ரூ.45 ஆயிரம் வரை விலை போன கறவை மாடுகள் நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.35 ஆயிரத்துக்கு சென்றது. ரூ.20 ஆயிரத்துக்கு விலை போன வளர்ப்பு கிடாரிகள் நேற்று ரூ.15 ஆயிரத்துக்கு விலை போனது. வறட்சி, தீவன பற்றாக்குறை காரணமாக ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். எதிர்பார்த்த விலை போகாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, வறட்சி, தீவன பற்றாக்குறை இருப்பதால் மாடுகளின் விற்பனை குறைவாக காணப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விவசாயிகள் ஏராளமானோர் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக விலை குறைவாக போனது. மழை பெய்ய தொடங்கி விட்டால் விவசாயிகள் மாடுகளை வாங்க தொடங்கி விடுவார்கள். அப்போது விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Next Story