காரையார் வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி


காரையார் வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 21 April 2019 3:15 AM IST (Updated: 21 April 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

காரையார் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது.

விக்கிரமசிங்கபுரம், 

காரையார் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது.

இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

நெல்லை மாவட்டம் காரையார் வனப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இங்கு சொரிமுத்து அய்யனார் கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வனத்துறையினர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் பீட் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னமயிலாறு பகுதியில் ஒரு பெண் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் வனச்சரகர் பாரத் மற்றும் வனத்துறை கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து சிறுத்தைப்புலியின் உடலை அங்கேயே டாக் டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுத்தைப்புலியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது விலங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டதில் சிறுத்தைப்புலி இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். இறந்த சிறுத்தைப்புலிக்கு 2 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் சிறுத்தைப்புலியின் உடலை வனத்துறையினர் அங்கேயே தீவைத்து எரித்தனர்.

காட்டெருமை நடமாட்டம்

மேலும் காரையார் செல்லும் வழியில் வனப்பகுதியில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி சென்று கொண்டிருக்கிறது. இதனால் காரையார் மற்றும் முண்டந்துறை வனப்பகுதியில் வழக்கமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரியும் காட்டெருமைகள் பகல் நேரத்திலும் ஆங்காங்கே சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து காரை யார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கோடைகாலம் என்பதால் காட்டெருமைகள் நீர்நிலைகளை தேடி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தான் காரையார் மற்றும் முண்டந்துறை வனப்பகுதிகளில் பகல் நேரங்களிலும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றார்.

Next Story