நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 62 கண்காணிப்பு கேமராக்கள்
தேனி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேனி,
தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறைகள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு துணை ராணுவ வீரர்கள் 26 பேர், தமிழக சிறப்பு போலீஸ் படையினர் 60 பேர், ஆயுதப்படை பிரிவு போலீசார் 40 பேர், உள்ளூர் போலீசார் 110 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுமட்டுமின்றி கூடுதல் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய 12 ஆயுதப்படை போலீசாரை கொண்ட ‘விரைவு எதிர்வினை குழு’ அமைக்கப்பட்டு உள்ளது. கலவரத்தை அடக்க பயன்படுத்தும் வஜ்ரா வாகனமும் வாக்குச்சாவடி மையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு உள்ளே, அறைக்கு வெளியே, வெளிப்புற வளாகம், வாக்கு எண்ணும் அறை, நுழைவு வாயில், கட்டிடத்தின் பின்புற பகுதி உள்பட மொத்தம் 62 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அறையில் உள்ள குழுவினர் 24 மணி நேரமும் காட்சிகளை கண்காணித்து வருகின்றனர். இதில் 22 கேமராக்கள் தற்போது கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற கேமராக்கள் ஓரிரு நாட்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். இத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story