மது விற்றதை தட்டிக்கேட்ட பெண்கள் மீது வழக்கு போலீசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மது விற்றதை தட்டிக்கேட்ட பெண்கள் மீது வழக்கு போலீசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 April 2019 4:45 AM IST (Updated: 21 April 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றதை தட்டிக்கேட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்கள் சாந்தி (வயது 40) மற்றும் கலா (38). இவர்கள் இருவரும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், மதுபாட்டில்களை மொத்தமாக பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

அத்துடன் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களையும் விற்றதாக தெரிகிறது. இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த இளமதி, ஆனந்தி மற்றும் பொதுமக்கள் மது விற்றதை தட்டிக்கேட்டனர். மேலும் இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசிலும் புகார் அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி, கலா இருவரும், தங்கள் மீது போலீசில் புகார் செய்த இளமதி, ஆனந்தி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டதுடன், இருவரையும் தாக்க முயன்றனர். இதைகண்ட அந்த பகுதி மக்கள் கலா, சாந்தி இருவரையும் மடக்கி பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இருதரப்பினரும் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து சாந்தி, கலா மற்றும் இளமதி, ஆனந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மது விற்பனை செய்ததை தட்டிக்கேட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து நேற்று மாலை புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இளமதி, ஆனந்தி இருவரையும் விடுவிப்பதாக கூறினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story