குமாரசாமி, சித்தராமையா உள்பட கூட்டணி கட்சியினர் பாகிஸ்தான் ஏஜென்டுகள் போல செயல்படுகிறார்கள் பா.ஜனதா குற்றச்சாட்டு


குமாரசாமி, சித்தராமையா உள்பட கூட்டணி கட்சியினர் பாகிஸ்தான் ஏஜென்டுகள் போல செயல்படுகிறார்கள் பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 9:09 PM GMT)

குமாரசாமி, சித்தராமையா உள்பட கூட்டணி கட்சியினர் பாகிஸ்தான் நாட்டு ஏஜென்டுகள் போல செயல்படுகிறார்கள் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு, 

குமாரசாமி, சித்தராமையா உள்பட கூட்டணி கட்சியினர் பாகிஸ்தான் நாட்டு ஏஜென்டுகள் போல செயல்படுகிறார்கள் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. பேட்டி

பல்லாரியில் நேற்று பா.ஜனதா வேட்பாளர் தேவேந்திரப்பாவுக்கு ஆதரவாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீராமுலு பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான குற்றச்சாட்டுகளை...

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுவது சரியல்ல. பிரதமருக்கு எதிராக பேசுவதை சித்தராமையா நிறுத்தி கொள்ள வேண்டும். குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர்களே முயற்சிக்கின்றனர். ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

மண்டியா தொகுதியில் தனது மகன் வெற்றி பெறுவதற்காக ஆட்சி, அதிகாரத்தை முதல்-மந்திரி குமாரசாமி தவறாக பயன்படுத்தி உள்ளார். மண்டியா தொகுதியில் வெற்றி பெற்றால், மற்ற 27 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது போல குமாரசாமி நினைக்கிறார். மண்டியாவில் சுமலதா வெற்றி பெறுவது உறுதி. மண்டியா மக்கள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

பாகிஸ்தான் ஏஜென்டுகள்

புல்வாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி ெகாடுத்து இந்திய ராணுவத்தினர் பாலகோட்டில் தாக்கல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு எதிராக முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, ராகுல்காந்தி, தேவேகவுடா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நாட்டு ஏஜென்டுகள் போல குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் செயல்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் பிரதமர் மோடி, மத்திய அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

பல்லாரி தொகுதியில் தேவேந்திரப்பா வெற்றி பெறுவது உறுதி. கர்நாடகத்தில் 24 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும். எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார்.

இவ்வாறு ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story