சட்டசபை, நாடாளுமன்றம் உள்பட 4 தேர்தல்களில் ஓட்டுப்போடாத நடிகை ரம்யா ஊருக்கு தான் உபதேசமா? என நெட்டிசன்கள் ஆவேசம்


சட்டசபை, நாடாளுமன்றம் உள்பட 4 தேர்தல்களில் ஓட்டுப்போடாத நடிகை ரம்யா ஊருக்கு தான் உபதேசமா? என நெட்டிசன்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 21 April 2019 4:15 AM IST (Updated: 21 April 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை, நாடாளுமன்றம் உள்பட 4 தேர்தல்களில் மண்டியாவில் தொடர்ந்து 4-வது முறையாக நடிகை ரம்யா ஓட்டுப்போடவில்லை.

மண்டியா, 

சட்டசபை, நாடாளுமன்றம் உள்பட 4 தேர்தல்களில் மண்டியாவில் தொடர்ந்து 4-வது முறையாக நடிகை ரம்யா ஓட்டுப்போடவில்லை. இதனால் ஊருக்கு தான் உபதேசம் செய்வீர்களா? என ரம்யாவுக்கு எதிராக நெட்டிசன்கள் ஆவேச கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது கட்டமாக சிவமொக்கா, தார்வார் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலில் 14 தொகுதிகளில் 69 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் அதிகபட்சமாக மண்டியா தொகுதியில் 80.23 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இந்த வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

4-வது முறையாக ஓட்டுப்போடாத ரம்யா

பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரம்யா, மண்டியாவை சேர்ந்தவர் ஆவார். மண்டியா தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ரம்யா, தற்போது அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக உள்ளார். இவருக்கு மண்டியா டவுன் காந்திநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.

ரம்யா மண்டியாவில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஒன்றும் இது புதிதல்ல. ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு (2018) சட்டசபை பொதுத்தேர்தல், அதே ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் போன்ற எந்த தேர்தல்களிலும் அவர் வாக்களிக்கவில்லை. நாடாளுமன்ற பொதுத்தேர்தலையும் சேர்த்து அவர் தொடர்ந்து 4 தேர்தல்களில் ஓட்டுப்போடவில்லை.

கேலி, கிண்டல்

நடிகை ரம்யா மண்டியாவுக்கு வந்தே பல ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பதால் அவர் அடிக்கடி டுவிட்டரில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், மக்களுக்கு அறிவுரை கூறும் முன்பு தங்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஏராளமானோர் ரம்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

மண்டியாவை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர், ரம்யாவை மண்டியாவுக்கு வரும்படி வெற்றிலை, பாக்கு வைத்து நூதன முறையில் அழைப்பு விடுத்தனர். தற்போது நடிகை ரம்யாவை சமூக வலைத்தளங்களில் அனைவரும் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள்.

புரியாத புதிர்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டணி கட்சி வேட்பாளர் நிகில் குமாரசாமியை ஆதரித்து நடிகை ரம்யா பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை ரம்யா, நிகில் குமாரசாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை. நடிகை ரம்யா, ஏன் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களிலும் தேர்தலில் ஓட்டுப்போட வேண்டும் என்று கூறும் நடிகை ரம்யா, ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வீர்களா... நீங்கள் ஜனநாயக கடமையாற்ற மாட்டீர்களா? என நெட்டிசன்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் இதுபற்றி ரம்யா எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளார். மண்டியாவில் ரம்யா பிரசாரம் செய்யாதது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. வாக்களிக்காதது பற்றியும், பிரசாரம் செய்யாதது பற்றியும் ரம்யா வாய் திறக்காத வரை இது பெரிய விவாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story