வேலம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: ‘கடின உழைப்பு தான் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும்’ துணை வேந்தர் கிருஷ்ணன் பேச்சு


வேலம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: ‘கடின உழைப்பு தான் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும்’ துணை வேந்தர் கிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 21 April 2019 5:43 AM IST (Updated: 21 April 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

கடின உழைப்பு தான் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் என வேலம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை எச்.சி.எல். மையத்தின் இணை துணைத்தலைவர் சுப்பாராமன் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் கலந்துகொண்டு 480 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் காமராஜர். அவரது பெயரில் காமராஜர் அரங்கம் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோரின் கடும் உழைப்பினால்தான் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். அப்படிப்பட்ட பெற்றோருக்கு மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் மரியாதை செலுத்துவதோடு அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த 1986-ம் ஆண்டு முதல் கடினமாக உழைத்த வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தற்போது பலருக்கு கல்வி வழங்குகிறார். அதற்கு அவரது கடின உழைப்பு மட்டும் காரணமல்ல. அவர், அவரது தாயை தெய்வமாக போற்றியதால்தான் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். எனவே மாணவர்கள் கடினமாக உழைக்க கற்றுக்கொள்ளவேண்டும். கடின உழைப்பு தான் மாணவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும். வலி தெரிய உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். கடும் வலியுடைய உடற்பயிற்சி செய்வோர்தான் சிறந்த விளையாட்டு வீரனாகிறார்கள். வலி நிறைந்த போராட்டங்களால்தான் நமக்கு சுதந்திரமும் கிடைத்திருக்கிறது. எனவே வலிக்க உழைக்க வேண்டும். வலியுடன் கிடைத்த வெற்றிதான் உண்மையான வெற்றியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் கணேஷ் நடராஜன், கல்லூரி முதல்வர் அல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story