அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரின் மேல்பீடம் சரிந்து விழுந்தது ஒருவர் படுகாயம்


அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரின் மேல்பீடம் சரிந்து விழுந்தது ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 22 April 2019 4:45 AM IST (Updated: 21 April 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேரின் மேல்பீடம் சரிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத்தின் போது பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா நடைபெறும். இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. இந்த தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இழுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து இந்த தங்கத்தேர் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.4 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்த தங்கத்தேர் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் இழுக்கப்படும். மற்ற நாட்களில் நேர்த்திக் கடனாக தங்கத்தேரை இழுப்பதற்கு கோவில் நிர்வாகத்தில் சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 3-ம் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு தங்கத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கத்தேரை பக்தர்கள் இழுத்தனர்.

அந்த தேர் சாமி சன்னதியில் புறப்பட்டு சம்பந்த விநாயகர் சன்னதி அருகில் செல்லும் போது தங்க தேரின் விமானம் உள்ள மேல்பீடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த பீடம் வேட்டவலத்தை சேர்ந்த மணிவண்ணன் (வயது 24) என்பவர் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து தங்கத்தேரை பிரகாரம் சுற்றி இழுத்து சென்று நிலையில் நிறுத்தினர். சித்ரா பவுர்ணமி முடிந்து 2 நாட்களில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், “தங்கத்தேர் கடந்த பிப்ரவரி மாதம் புனரமைக்கப்பட்டது. துறை அதிகாரிகள் மூலம் இந்த தேர் சரிபார்க்கப்பட்ட பிறகே வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தேரின் மேல் பீடம் சரிந்து விழுந்து உள்ளது. இதுகுறித்து தங்கத்தேரை புனரமைத்த ஸ்தபதியை அழைத்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படும்” என்றார்.

Next Story