திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் மீது அரசு பஸ் உரசியதில் சிறுவன் பலி 3 பேர் படுகாயம்


திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் மீது அரசு பஸ் உரசியதில் சிறுவன் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 21 April 2019 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் மீது அரசு பஸ் உரசியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திருவண்ணாமலை,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த அனுமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி, விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் கோவிந்தராஜ் (வயது 15), கார்த்தி (13). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செல்வி தனது மூத்த மகன் கோவிந்தராஜ் மற்றும் உறவினர்களுடன் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக சரக்கு வேனில் வந்தனர். பின்னர் அவர்கள் கிரிவலம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு அதே சரக்கு வேனில் திரும்பி சென்றனர்.

கடந்த 19-ந் தேதி மாலை திருவண்ணாமலையை அடுத்த சின்னபாலியப்பட்டு கூட்டுரோடு அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் சரக்கு வேன் மீது உரசியுள்ளது. அப்போது பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி கோவிந்தராஜ் முகத்தில் பலமாக பட்டது. இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சரக்கு வேனில் வந்த கோமதி, கனகராஜ் உள்பட 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் சிறுவன் கோவிந்தராஜின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story