ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவன் பலி
ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி கோனேரிகுப்பத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கதிரவன் (வயது 18). இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருந்தார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தொட்டியில் கதிரவன் ஒரு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றார்.
அப்போது மழைநீர் தேங்கி இருந்ததால், கதிரவன் சறுக்கி அருகில் இருந்த மின்சார கம்பி மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கதிரவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து ரவி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்லும் கனவில் இருந்த மாணவன் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story