பாப்பாரப்பட்டி அருகே மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


பாப்பாரப்பட்டி அருகே மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 5:03 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது நாகதாசம்பட்டி. இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மது குடிக்க வருபவர்கள் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பெண்களை கேலி, கிண்டல் செய்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் அந்த பகுதியில் சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்த பகுதியில் மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மது விற்பதை கண்டித்து நேற்று தர்மபுரி- பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் நாகதாசம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story