வெள்ளியங்கிரி மலையேறிய பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி சாவு
கோவையில் வெள்ளியங்கிரி மலையேறிய பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார்.
பேரூர்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நசானே அருள்தாஸ் (வயது 59). இவர் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது. பின்னர் புதுச்சேரியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அருள்தாஸ் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல், மலை ஏறியஅவர் 5-வது மலையில் கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
உடனடியாக இதுகுறித்து பக்தர்கள் வனத்துறையினர் மற்றும் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலையேற வந்த சென்னையை சேர்ந்த ரத்தனவேலு என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story