சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய டிப்பர் லாரியை துரத்திப்பிடித்த தாசில்தார் தமிழகம், புதுவை போலீசார் விசாரணையில் பரபரப்பு


சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய டிப்பர் லாரியை துரத்திப்பிடித்த தாசில்தார் தமிழகம், புதுவை போலீசார் விசாரணையில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2019 11:15 PM GMT (Updated: 21 April 2019 5:52 PM GMT)

கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய டிப்பர் லாரியை வில்லியனூர் தாசில்தார் துரத்திச்சென்று பிடித்தார். லாரியை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுவை போலீசாருக்கு இடையே விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர், 

வில்லியனூர் அருகே கோனேரிக்குப்பம், ஆரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் கோனேரிக்குப்பம், பெரம்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். ஆனால் டிரைவர் டிப்பர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

உடனே தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் டிப்பர் லாரியை துரத்திச்சென்று தமிழக பகுதியான பெரம்பையில் மடக்கி பிடித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அகரம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி என்பதும், கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிக்கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதி காரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்ய முயன்றபோது லாரி உரிமையாளர் கணபதி லாரி தமிழக பகுதியில் பிடிபட்டதால் தமிழக போலீசாரிடம் லாரியை ஒப்படைக்க வேண்டும் என்று தாசில்தார் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை தாசில்தார் மறுத்துவிட்டார்.

அப்போது திடீரென்று கணபதிக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் லாரியை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் மற்றும் தமிழக பகுதியான கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

உடனே கோட்டக்குப்பம் போலீசார் டிப்பர் லாரியை தங்களிடம் ஒப்படைக்கும் படி கேட்டனர். அதற்கு தாசில்தார் கார்த்திகேயன் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடிதம் கொடுத்துவிட்டு டிப்பர் லாரியை எடுத்து செல்லுங்கள் என்று கூறினார். இதனையடுத்து தாசில்தார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story