திண்டுக்கல்லில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு - அடுத்தடுத்த வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை
திண்டுக்கல்லில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அடுத்தடுத்த வீடுகளிலும் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாசிலாமணிபுரம் பாப்புலர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பேட்ரிக். அவருடைய மனைவி அமலா (வயது 29). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பேட்ரிக் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார்.
சில மணி நேரத்தில் அவர் திரும்பி வந்துவிடுவார் என்பதால் அமலா வீட்டின் கதவை பூட்டவில்லை என்று தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அமலாவின் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த அமலா அவர்களை தடுக்க முயன்றார். இருப்பினும் அவர்கள் அமலா அணிந்திருந்த 2 தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமலா, இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் பேட்ரிக் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மனைவி தூங்கி கொண்டிருந்தபோது 5½ பவுன் தாலிச்சங்கிலி, 2½ பவுன் சங்கிலி ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துசென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியையிடம் நகைகளை பறிப்பதற்கு முன்பு, அருகே வசிக்கிற ஆரோக்கிய செல்வத்தின் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம், ¼ பவுன் நகை மற்றும் இன்னொரு வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆசிரியையின் வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீடுகளில் மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story