ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 April 2019 3:30 AM IST (Updated: 22 April 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இடைத்தேர்தல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சுகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தாசில்தார் மலர்வேந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சிவகாமசுந்தரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனுக்களை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 29-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 30-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 2-ந்தேதி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மே மாதம் 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 23-ந்தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்கிறது.

பணியாளர்கள்

இதற்கிடையே, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான இளஞ்சிவப்பு நிறத்திலான வேட்புமனுக்கள் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்காக 1,322 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதே பணியாளர்களை மீண்டும் இடைத்தேர்தலில் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பறக்கும் படை அதிகாரிகளை அதிகளவில் நியமித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story