கொங்கணாபுரம் அருகே திருடிய பின் கடைக்கு தீ வைத்த கொள்ளையர்கள் சிம்கார்டை கைப்பற்றி போலீசார் விசாரணை


கொங்கணாபுரம் அருகே திருடிய பின் கடைக்கு தீ வைத்த கொள்ளையர்கள் சிம்கார்டை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 April 2019 4:15 AM IST (Updated: 22 April 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே கடையில் திருடிய பின்னர் கடைக்கு தீ வைத்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். அப்போது கொள்ளையர்கள் விட்டுச்சென்ற சிம்கார்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி ஜெயந்தி (38). இவர் எடப்பாடி-சங்ககிரி சாலையில் உள்ள கோணமோரி மேடு பகுதியில் அரசு கலைகல்லூரி அருகே ஜெராக்ஸ் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ஜெயந்தி கடையினை மூடிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ஜெராக்ஸ் கடையிலிருந்து புகை வருவதாக அருகில் இருந்தவர்கள் ஜெயந்திக்கு தகவல் தெரிவித்தனர்.

மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என பயந்த அவர் உடனடியாக கடைக்கு வந்தார். அப்போது கடை பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்தார்.

கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் திருடிய பின்னர் கடைக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.

கடை உள்ளே ஜெயந்தி பார்த்தபோது பணம் வைக்கும் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. அதில், 2 சிம் கார்டுகள், 2 புகைப்படம், பஸ் டிக்கெட் மற்றும் ரூ.100 இருப்பது தெரியவந்தது. கடைக்குள் புகுந்து திருடிவிட்டு, தீ வைத்த நபர்கள் மணிபர்சை விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசில் ஜெயந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். திருடர்கள் விட்டுச்சென்ற புகைப்படம், சிம்கார்டு மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story