திருவேங்கடம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி மனைவி, குழந்தைகள் கண்முன்னே பரிதாபம்
திருவேங்கடம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார். மனைவி, குழந்தைகள் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
திருவேங்கடம்,
திருவேங்கடம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார். மனைவி, குழந்தைகள் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அழகியநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் அத்திப்பட்டியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் வீட்டின் விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரவணன் தனது மனைவி, குழந்தைகளுடன் நேற்று வந்தார்.
மாலையில் அவர்கள் அனைவரும் தங்களது உறவினர்களுடன் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்கு சென்றனர். சரவணனுக்கு நீச்சல் தெரியாது. அவர் குளித்துக் கொண்டு இருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அலறினர். இதையடுத்து உறவினர்கள் சரவணனை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீர் மூழ்கி இறந்தார். உறவினர்கள் குளத்தின் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடல் மீட்பு
இதுகுறித்து உடனடியாக கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கும், குருவிகுளம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சரவணன் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி, குழந்தைகள் கண் எதிரே கூலித்தொழிலாளி குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story