பெரம்பலூரில் பெண்களை மிரட்டி பாலியல் கொடுமை முக்கிய பிரமுகர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


பெரம்பலூரில் பெண்களை மிரட்டி பாலியல் கொடுமை முக்கிய பிரமுகர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 7:44 PM GMT)

பெரம்பலூரில் பெண்களை மிரட்டி பாலியல் கொடுமை செய்த முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை தேடி வரும் பெரம்பலூர் நகரை சேர்ந்த இளம்பெண்களை, ஆசைவார்த்தை கூறி பல பெண்களை முக்கிய பிரமுகர்கள் சிலர், வீடியோ கிராபர் ஒருவர் உதவியுடன் பாலியல் கொடுமை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் இந்த பிரச்சினை தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் நேற்று மாலை புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கும்பலின் மிரட்டல்களுக்கு பயந்து தங்களது வாழ்க்கை கேள்விக்குரியதாகி விடுமோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் புகார் கொடுக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி முறையாக விசாரித்து, இந்த சம்பவங்களில் தொடர்புடையை அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்களை வெளிவராமல் ரகசியம் காக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் தடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மிக முக்கியமான இந்த புகார் மீது விசாரணை நடத்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் உடனே தங்களது விசாரணையை தொடங்குவார்கள். இதில், போதிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story