கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
புதுவையில் பெண் என்ஜினீயர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகர் 12-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மரியஜோசப் (வயது 70). இவருடைய மகள் பிரியதர்ஷினி (25), என்ஜினீயர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பிரியதர்ஷினி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதற்கிடையே அவர் கடந்த 18-ந்தேதி தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக புதுவைக்கு வந்தார். மறுநாள் 19-ந்தேதி அவர் தனது அறையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்க நிலையில் இருந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரியதர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் பிரியதர்ஷினி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரியதர்ஷினி அறையில் கடிதம் இருந்ததை பார்த்த போலீசார் அதனை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர், தான் முதலில் பணியாற்றிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்து வந்தேன். இதற்கிடையே திடீரென என்னை பதவி இறக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனவே நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன். ஆனாலும் எனக்கு அது மிகுந்த வருத்தம் அளித்து வந்ததால் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story