காங்கிரஸ் பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


காங்கிரஸ் பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 April 2019 4:00 AM IST (Updated: 22 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் அவருடைய மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மூலக்குளம்,

புதுவை உழவர்கரை புது நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 43), காங்கிரஸ் பிரமுகர். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே தனது மகன் ஆகாசுடன் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு மதுகுடித்துவிட்டு போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷும் (25) மற்றும் அவருடைய நண்பரும் கோபியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் சேர்ந்து கோபியை சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க முயன்ற ஆகாசையும் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் கோபி, ஆகாஷ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் கோபி புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பரை தேடி வருகிறார்கள்.

Next Story