அரசு மருத்துவமனையில் பெண் சாவு: கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


அரசு மருத்துவமனையில் பெண் சாவு: கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 8:16 PM GMT)

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவரை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீழ 4-ம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி (வயது 23). இவருக்கும் ராமேசுவரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மிதுன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விஜய், தனது மனைவி நிவேதா பிரியதர்ஷினியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிவேதா பிரியதர்ஷினி விஷம் அருந்தி, தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் எனக்கூறி புதுக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோருக்கு விஜய் தகவல் கொடுத்தார். இதையடுத்து ராமேசுவரத்திற்கு சென்ற நிவேதா பிரியதர்ஷினியின் பெற்றோர்கள், அங்கு சுயநினைவு இல்லாமல் இருந்த நிவேதா பிரியதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து ராமேசுவரம் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நிவேதா பிரியதர்ஷினிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூச்சு குழாய் அறுவை சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது. பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து நிவேதா பிரியதர்ஷினி தனது பெற்றோர்களிடம் தனது மகனை மீட்டு தாருங்கள் எனக்கூறி உள்ளார். இதையடுத்து நிவேதா பிரியதர்ஷியின் பெற்றோர் ராமேசுவரத்திற்கு சென்று, விஜயிடம், மிதுனை எங்களோடு அனுப்புங்கள் என்று கேட்டு உள்ளனர். ஆனால் அவர் அனுப்ப மறுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிவேதா பிரியதர்ஷினிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிவேதா பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் நேற்று காலையில் நிவேதா பிரியதர்ஷினியின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

அப்போது நிவேதா பிரியதர்ஷினியின் உறவினர்கள், நிவேதா பிரியதர்ஷினியின் இறப்பிற்கு அவரது கணவர் விஜய்தான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும். மிதுனை மீட்டு எங்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் விஜய்க்கு உதவி செய்த, அவரது பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி நிவேதா பிரியதர்ஷினியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து நிவேதா பிரியதர்ஷினியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நிவேதா பிரியதர்ஷினியின் தந்தை மணிகண்டன் கூறுகையில், நாங்கள் நிவேதா பிரியதர்ஷினியிடம் விசாரித்தோம். அப்போது அவர் தன்னை விஜய் சந்தேகப்பட்டு கொலை செய்ய முயன்றார் எனக்கூறினார். எனவே எனது மகளை கொடுமை செய்து, அவர் இறப்பதற்கு காரணமாக இருந்த அவரது கணவர் விஜய்யை கைது செய்ய வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த விஜய்யின் பெற்றோர்கள் கணேசன்-ஜெயந்தி உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும். மேலும் நிவேதா பிரியதர்ஷனின் மகனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். 

Next Story