துவரங்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


துவரங்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள ராசிப்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார், அறுந்து ஆழ்குழாய்க்குள் விழுந்து விட்டது. ஆனால் அதை அகற்றாமல் அப்படியே விட்டு விட்ட நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை கஞ்சநாயக்கன்பட்டி - செந்துறை சாலையில் ராசிப்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, ஆழ்குழாய் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story