அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் 3-வது நாளாக மறியல் - அலங்காநல்லூரில் பெண்கள் போராட்டம்
குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி நேற்று 3-வது நாளாக மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் மறியல் நடைபெற்றது.
கொட்டாம்பட்டி,
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பேசி ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது. பொன்னமராவதியில் கலவரம் வெடித்தது. இதற்கிடையே அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி கொட்டாம்பட்டியை அடுத்த புழுதிப்பட்டியில் மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் கடந்த 19-ந்தேதி மறியல் நடைபெற்றது.
இதேபோன்று நேற்று முன்தினம் கொட்டாம்பட்டியை அடுத்த பாண்டாங்குடி 4 வழிச்சாலையில் 2-வது நாளாக மறியல் நடந்தது. முன்னதாக இந்த மறியலில் ஈடுபட்டவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போராட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து சுமார் 7 கி.மீ. நடந்து சென்று 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கம்பூர், அலங்கம்பட்டி, பட்டமங்கலபட்டி, அயவத்தான்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் 4 வழிச்சாலையில் திரண்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், துணை சூப்பிரண்டு சுபாஷ், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மேலூர் தாசில்தார் சிவகாமி நாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவதூறு பரப்பிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் அலங்காநல்லூர் கேட்டுகடையில் பெண்கள் ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் துடைப்பம் ஏந்திவந்தனர். அப்போது அவர்கள், குறிப்பிட்ட சமுதாயம் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய நபர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மறியலில் அலங்காநல்லூர், வலசை, கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், நல்லு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story