தேர்தல் முடிந்து விட்ட நிலையில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை
கோடைகால குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதால் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலால் நீர் ஆதாரம் வறண்டு விட்ட நிலையில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. நகர்ப்புறங்களில் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கிராமப்பகுதிகளில் நீர்ஆதார வறட்சி, குடிநீர் பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபடும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் பொதுமக்கள் முறையான குடிநீர் வினியோகம் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிராம மக்கள், குடிநீர் கேட்டு பஞ்சாயத்து மற்றும் யூனியன் அலுவலகங்களை காலி குடங்களுடன் முற்றுகையிடும் நிலை அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே கோடைமழை பெய்தாலும், நீர் ஆதாரங்களில் குடிநீர் அதிகரிக்க வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை.
தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மாவட்ட நிர்வாகம் மற்ற உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் முழு கவனத்துடன் ஈடுபட முடியாத நிலை இருந்தது. தற்போது தேர்தல் பணி முடிந்து விட்ட நிலையில் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி துறை அதிகாரிகளும் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் கோடைகால குடிநீர் பிரச்சினைகளை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story