வெம்பக்கோட்டை பகுதியில் நேரடி விற்பனைக்காக கடை திறக்கும் பட்டாசு ஆலை அதிபர்கள்
வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசுகளை விற்பனை செய்ய பட்டாசு ஆலை அதிபர்களே அதிக அளவில் கடைகளை கட்டி வருகிறார்கள்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாராகும் பட்டாசுகள் மொத்தமாக வெளி மாநிலங்களுக்கும் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சீசன் நேரத்தில் பட்டாசு ஆலை அதிபர்கள் நகர் பகுதிகளில் கடை அமைத்தும் விற்பனை செய்வார்கள்.
ஆனால் சமீபகாலமாக ஆன்-லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. அத்தோடு தீபாவளி உள்ளிட்ட சமயங்களில் பலர் நேரடியாக வெம்பக்கோட்டை பகுதிக்கு வந்து பட்டாசுகளை வாங்கிச்செல்கின்றனர். இதனால் பட்டாசு ஆலை அதிபர்கள், நேரடி விற்பனை நிலையம் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காக வெம்பக்கோட்டை பகுதியில் காலியாக கிடக்கும் தரிசு நிலங்களில் கடைகளை கட்டி வருகின்றனர். நகர் பகுதியில் கடை திறக்கவேண்டுமெனில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுபோன்ற இடங்களில் அந்த வகையிலான தொந்தரவு இல்லை என்று கருதுகின்றனர்.
மேலும் விளைநிலங்கள் எல்லாம் வறட்சியினால் விலைநிலங்களாகி வீட்டு மனைக்காக பிரிக்கப்பட்டு கிடந்தன. அதனை பட்டாசு ஆலை அதிபர்கள் வாங்கி கடை கட்டியுள்ளனர். அங்கு பட்டாசுகளை சேமித்து வைத்து ஆன்-லைனில் ஆர்டர் கொடுப்போருக்கு அனுப்பி வைக்கவும் செய்கின்றனர். சமீபகாலத்தில் அந்த பகுதியில் 2 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு இருப்பதோடு 20-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story