திருப்பரங்குன்றம் அருகே, பெயிண்டரை குத்திக் கொன்ற கொத்தனார் கைது
திருப்பரங்குன்றம் அருகே பெயிண்டரை குத்திக் கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம், திருவள்ளுவர்நகர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (27). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
முருகனும், சுந்தரபாண்டியனும் திருவள்ளுவர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு கடை முன்பாக நின்று பேசி கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேருமே குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன் அருகில் கிடந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து முருகனை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
பாட்டிலால் குத்தியதில் படுகாயமடைந்த முருகன் உயிருக்கு போராடினார். உடனடியாக இதுகுறித்து ஆஸ்டின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகன் இறந்துபோனார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே திருவள்ளுவர் நகர் பகுதியில் சுந்தரபாண்டியன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சுந்தரபாண்டியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story