மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றுக்கு சென்ற தண்ணீரில் சிக்கிய சரக்கு வாகனம் - நீண்ட நேரம் போராடி போலீசார் மீட்டனர்
மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றுக்கு சென்ற தண்ணீரில் சிக்கிய சரக்கு வாகனத்தை நீண்ட நேரம் போராடி போலீசார் மீட்டனர்.
மசினகுடி,
மசினகுடி அருகே சிங்காராவில் நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கிளன்மார்கன் அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி நடைபெறுகிறது. மின் உற்பத்திக்கு பிறகு வெளியேற்றப்படும் தண்ணீர், சுரங்கப்பாதை வழியாக ஆச்சக்கரையில் ஓடும் மசினகுடி ஆற்றில் விடப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரங்களில் மட்டுமே அந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் ஆற்றில் கலக்கும் பகுதியில் நேற்று மாலை மசினகுடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது சரக்கு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார். அப்போது சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு வாகனத்தை கழுவி கொண்டிருந்தார். அப்போது நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கியதால், சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் வெளியேறியது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கண்டு ரவிக்குமார் செய்வது அறியாமல் தவித்தார்.
பின்னர் வாகனத்துக்குள் ஏறி அமர்ந்து கொண்டார். தொடர்ந்து வாகனம் தண்ணீரில் சிக்கி கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரக்கு வாகனம் மற்றும் அதனுள் அமர்ந்திருந்த ரவிக்குமாரை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story