சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதிரொலி, கடலூர் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன


சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதிரொலி, கடலூர் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

கடலூர் முதுநகர்,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நடந்து முடிந்தது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள அறைகளில் வைத்து, சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம்(மே) 23-ந் தேதி நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால் மறுநாள் கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு, சிறு பிரச்சினைகள் உருவாகின. மேலும் தேர்தல் முன்விரோதம் போன்ற சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக பா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, ஸ்ரீமுஷ்ணத்தில் இருதரப்பினரிடையே மோதல், கடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது மதுபிரியர்கள் தாக்குதல் நடத்தியது, வடலூரில் தே.மு.தி.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு, பெண்ணாடத்தில் இருதரப்பினரிடையே மோதல் என சில பிரச்சினைகள் நடந்துள்ளன.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஒரு சில சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஆய்வு செய்து அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து நேற்று கடலூர் முதுநகர், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் என மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள பகுதிகளில் உள்ள 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரச்சினைக்குரிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் சுமார் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றார்.

Next Story