ராஜகம்பீரம் பைபாஸ் ரோடு பணி நிறைவடைந்தது; விரைவில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தகவல்
ராஜகம்பீரம் பைபாஸ் ரோடு பணி நிறைவடைந்ததால், விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை,
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை வழியாக ராமநாதபுரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பணிகள மணல் தட்டுப்பாடு, ரெயில்வே அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் தாமதமாக நடந்து வந்தது.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் உள்ளிட்ட இடங்களில் பைபாஸ் ரோடு அமைக்கப்படுகிறது. ராஜகம்பீரத்தில் பைபாஸ் ரோடு அமைப்பதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டதால், ரோடு அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் பணிகள் மிகவும் தாமதமாக நடந்தன. இந்தநிலையில் நிலைமை சீரான பின்பு ராஜகம்பீரத்தில் சுமார் 2½ கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ராஜகம்பீரத்தின் கிழக்குப்பகுதியை பைபாஸ் ரோட்டுடன் இணைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பணியும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும். அதன்பின்பு போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் ராஜகம்பீரத்தினுள் செல்லாமல் பைபாஸ் ரோட்டிலேயே செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.