பொன்னமராவதி சம்பவம்: சிவகாசியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 5 கிராம மக்கள் முற்றுகை


பொன்னமராவதி சம்பவம்: சிவகாசியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 5 கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 April 2019 4:30 AM IST (Updated: 22 April 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து சிவகாசியில் 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

சிவகாசி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தை சேர்ந்த பெண்களை சிலர் தரக்குறைவாக பேசி வாட்ஸ்–ஆப்பில் வெளியிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஒரு பிரிவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை போலீசார் வாபஸ் பெற வேண்டும் என்று கோரி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், காந்திநகர், இந்திராநகர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் 600 பேர் தங்கள் கிராமத்தில் இருந்து திரண்டு வந்து சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

அங்கு அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் பொன்னமராவதி சம்பவத்தில் எங்கள் தரப்பை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை போலீசார் வாபஸ் பெற வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுக்க இருப்பதாக கூறினர். ஆனால் போலீசார் அவர்களை ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கிராம மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 5 பெண்கள் மட்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க அனுமதி வழங்கினார்.

பின்னர் 5 பெண்கள் மட்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்று ஆர்.டி.ஓ. தினகரனிடம் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் தமிழ்நாட்டில் 2 கோடி பேர் வசித்து வரும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை சிலர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. தினகரன் உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் 5 கிராம மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். 5 கிராம மக்கள் ஒரே நேரத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு திரண்டதால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே 50–க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு போக்குவரத்து பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது.


Next Story